×

சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து இளைஞர் படுகாயம்

சென்னை: சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி அறுத்ததில் இளைஞர் கருணாநிதி படுகாயம் அடைந்துள்ளார். சென்னையில் 60 நாட்களுக்கு மாஞ்சா நூல் பயன்படுத்த காவல்துறை தடை விதித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூல் தயாரிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாஞ்சா நூலை இறக்குமதி செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். சென்னையின் கடந்த காலங்களில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட காரணத்தினால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தடுப்பதற்காக பட்டம் விற்பது, வாங்குவது மற்றும் மாஞ்சா நூல் செய்வது போன்றவை சென்னை காவல் துறையினரால் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் பட்டம் விடுவது சென்னையில் குறைந்திருந்தது. தற்போது கொரோனா தொற்றின் காரணமாக, 144 ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டில் இருந்தபடியே பட்டம் விட்டு விளையாடி வருவது கணிசமான முறையில் அதிகரித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்பாக தனியார் செய்தி சேனல் நிறுவனத்தின் ஊழியர் புவனேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அண்ணா சாலை மசூதியின் அருகே பட்டத்தின் மாஞ்சா நூல் பறந்து வந்து அவரது கழுத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் புவனேஷ் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 14 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Tags : area ,Chennai ,Erukkancherry ,Manja Nool , Chennai, Manja Nool
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி